Wednesday, 25 May 2016

குடிமைப் பங்காளர்கள் (Civil partnership): - ஹன்ஸா.

குடிமைப் பங்காளர்கள் (Civil partnership): - ஹன்ஸா.

நான் கல்லூரியில் படிக்கையில் எங்கள் ப்ரொஃபசர் பெண்மணி ஒருவருக்கு குடும்பச் சுமையால் 35வயது வரை திருமணம் நடக்கவேஇல்லை. அதன் பிறகு திருமணம் வேண்டாம் எனும் முடிவை அவர் எடுத்தார். அதே சமயத்தில் அதே போல திருமணம் செய்யாமல் இருந்த மற்றொரு தோழியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். தோழிகள் இடையே வேறெந்த உறவும் கிடையாது. ஒருவர் வீட்டைப் பராமரிப்பதும் மற்றவர் சம்பாதிப்பதுமாக இருந்தனர்.

இப்படியாக ஒரு பல வருடங்கள் கடந்தன. இனி இப்படியே நாங்களிருவரும் இருக்கப்போகிறோம் என்றே தன் வாழ்க்கையை நிர்ணயம் செய்து வைத்திருந்தனர். ரேசன் கார்டு போன்றவை வாங்குவதில் ஏற்பட்ட சின்னச் சின்ன சிக்கல்களால் அதையும் வாங்கி வைக்கவில்லை.

அந்த சமயத்தில்…

அதுவரை சம்பாதித்து வந்த ப்ரொஃபசர் திடீரென நோய்வாய்ப்பட்டு சட்டென இறந்துவிட்டார். சட்டப்படி இறந்தவரின் சொத்து உயில் ஏதும் எழுதாமல் இறந்தமையால், இறந்தவரின் தாயார், மற்றும் சகோதர சகோதரிகளிடையே பிரித்துக் கொள்ளப்பட்டது.
ஏனெனில் தோழியர் இருவர் ஒரு கூரையின் கீழ் வாழ்வது என்பது ஒரு குடும்பம் ஆகாது. குடும்பம் என்றால், கணவன், மனைவி, அவர்களின் பிள்ளைகள்தான்.  ஆனால் இவர்களை ‘குடிமைப் பங்காளர்கள்’ எனச் சொல்லி சட்ட அங்கிகாரம் அளித்தால் என்ன?

இங்கே..

அதுவரை அவரை நம்பியே வாழ்ந்தும், தனது உழைப்பை அந்த தோழிக்கு அளித்தும் கடைசியில் அந்த துணையாக நின்ற தோழி நிர்கதியாகவே விடப்பட்டார். உண்மையில் தோழி இருந்திருந்தால், அல்லது தன் சாவு பற்றிய சிறு ஊகம் இருந்திருந்தால் கூட சொத்தை தோழி பெயருக்கு உயில் எழுதி வைத்திருந்திருப்பார் என்பது அனைவருக்குமே புரிந்தாலும், வேறேதும் செய்ய முடியவில்லை. பிறகு ’கருணை கூர்ந்து’ அந்த குடும்பம் இவருக்கு சிறு தொகை ஒன்றை அளித்தது.

சரி.

இது போலவே, திருமண உறவில் ஈடுபடாதவர்கள் ஒரே குடும்பமாக வசிப்பதுண்டு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள், சகோதரர்கள் எனில், பெரிதளவில் சட்டப்பிரச்சனை கிடையாது.(ஆனாலும் அங்கும் பிரச்சனை உண்டுதான்.) அப்படி அல்லாமல் இணைந்த் வாழ்பவர்களும் அதிகரித்து வரும் சூழலில் சட்டம் அதற்கு என்ன செய்யப்போகிறது?

ஓரிடத்தில் ஒரு ஆணும் பெண்ணும், இணைந்து வாழ்ந்து வந்தால், அதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் அவர்கள் இணை என நம்பும் வண்ணம் வாழ்ந்து வந்தால், அப்படி வாழ்ந்து வந்தது தொடர்ந்து சிலகாலமாவது இருந்திருந்தால், அவர்கள் தம்பதியராகவே பார்க்கப்படுவார்கள். அவர்களில் பிரிவு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு, அதாவது அண்டி வாழ்ந்து வந்தவருக்கு மற்றவர் சட்டப்படி பதில் சொல்லியே ஆகவேண்டும். அந்த நபர்கள் ஏற்கனவே திருமணம் ஆனவராக இருந்திருந்தால் கூட என சட்டம் சொல்கிறது.(சட்டமானது பலமணத்தை அங்கிகரிக்கவில்லை. ஆனால், ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயல்கிறது.

இதையேஇன்னும் கொஞ்சம் நீட்டித்து, எந்த இரு நபர்கள் இணைந்து ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து வந்திருந்தால், அவர்களை ஒரு குடும்பமாக (பாலுறவு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) அங்கிகரித்தால் என்ன?

ஆணும் பெண்ணும், திருமண வாழ்வில் இணைந்து அவர்கள் இருவரின் உற்பத்தியாகிய சொத்து குடும்ப விருத்தி என அனைத்திற்கும் இருவருமே சொந்தக்காரர்கள் என்பது போல, அவர்களில் ஒருவர் இறப்பின் மற்றவருக்கு அந்த சொத்துக்கள்(உயில் இல்லையெனில்) சென்று சேரும் சட்ட நடை முறை போல, இருவரும் பிரிந்தால், அண்டி இருப்பவருக்கு மற்றவர் தொடர் உதவி(ஜீவனாம்சம் தர வேண்டும் என்பது போல..) செய்ய வேண்டும் என்பது போன்ற சட்ட உதவிகள் அளிக்கப்படவேண்டும்.

ஏனெனில், திருமணமே செய்து கொள்ளாத இரு நண்பர்கள், இணைந்து ஒருவர் பணம் சம்பாதிப்பதும். ஒருவர் வீட்டைக் கவனிப்பதுமாகவோ, அல்லது இருவரும் எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொள்வதாகவோ சேர்ந்து வாழ்வதுண்டு அல்லவா? இவர்களை இதுவரை சட்டம் கணக்கில் கொண்டதில்லை. அதாவது, இருவர் இப்படி வாழ்ந்து வர, அவர்களில் ஒருவர் உயில் ஏதும் எழுதிவைக்காமல் இறந்துவிட்டால், அவரின் சொத்தானது, அந்த இறந்தவரின் பெற்றோர், மற்ற சகோதர சகோதரிகள் என பாகம் பிரிக்கப்படும். ஆனால் உண்மையில் அந்த சகோதர சகோதரிகள்  தனக்கென குடும்பம் ஒன்றை கொண்டிருப்பர். கூடவே இருந்து தன் உழைப்பை நல்கிய நபர் நிர்கதியாக நிற்பார் அல்லவா?

இது போன்று இருவர் இணைந்து வாழ முடிவெடுத்தால் அவர்களின் உறவு எப்படிப்பட்டதாக இருப்பினும், சட்டப்படி ஒரு திருமணமான தம்பதிகளுக்கிடையே என்னவிதமான சட்ட உரிமைகள் உண்டோ அதே அள்வுக்கு இந்த குடிமைப்பங்காளர்களையும் ஏற்றால் என்ன?

இதே போல, திரு நங்கைகள், திருநம்பிகள் இவர்கள் கூட்டாக வாழ்வதுண்டு. இவர்களுக்குள் ஒருவரை ‘அம்மா’ வாகக் கொண்டு வாழ்வதும் உண்டு. இவர்களுக்குள்ளேயே தத்தெடுப்பதும் சடங்காக நடத்தப்படும். இவை எல்லாம் அவர்கள் திருப்திக்கு நடத்திக் கொள்ளப்படுபவையே. 

இரு, திரு நங்கைகள், திரு நம்பிகள் இணைந்து வாழ்வாரேயாயின், அவ்விருவரின் கூட்டுக்கு, பங்கிற்கு ”குடிமைப் பங்காளர்கள்” என சட்டபூர்வ அந்தஸ்து ஏன் அளிக்கப்படக் கூடாது.?

இதே வகையிலேயே ஓர் பால் ஈர்ப்புள்ளோரும் வருவார்கள். ஓர் பால் ஈர்ப்புள்ளவர்களின் உறவு திருமண உறவைப் போன்றதே. எனவே அவர்கள் திருமண அந்தஸ்தைக் கேட்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஓர்பாலின திருமணங்கள் சட்டபூர்வமாக இன்னும் ஏற்கப்படவில்லை. அதற்கான சட்டபூர்வ ஏற்பு வரும் வரையில், பாலுறவு என்பதற்கு எந்த கவனமும் தராமல், இருவர் இணைந்து வாழ்வதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் தேவையானதொன்றாக இருக்கிறது.

ஏனெனில் இவர்களிடையேயும், ஒருவருக்குப் பின் மற்றவர் இருக்க நேர்கையில் மேற்கண்ட அதே சிக்கலே வரும். அல்லவா?

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஓர் பாலினம் என்பது இதுவரை குற்றமாக(crime) இருந்துவந்தது. ஆனால், சமீபத்தில் ஓர் பாலினம் என்பது Decriminalize செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களையும், இவர்களுக்கென தனி சட்டம் (தேவைப்படின்) வரும் வரையில் குடிமைப் பங்காளர்களாக அங்கீகரிக்கலாம். சட்ட உரிமையும் அளிக்கலாம் என்றே தோன்றுகிறது.(Decriminalize என்றால் குற்றமல்ல என்று பொருள் அல்ல. சட்டப் பொருள் அகராதியின்படி, சட்டத்தில் குற்றத்திற்கு தண்டனை தரப்படும். இங்கே இது Decriminalize செய்யப்பட்டதால் ”தண்டனைக்குரிய குற்றமல்ல” என்றே பொருள் எடுக்க வேண்டும்)

இந்த செயல் முறை, ஏற்கப்பட்டால், வேறு பல சட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது வேறு பல சட்டங்களிலும் சட்ட திருத்தம் கொண்டு வர நேரிடலாம்.
சொத்துரிமைச் சட்டம், ஜீவனாம்சம், பாதுகாப்பு, ஓய்வூதியம், தத்தெடுத்தல், பணியாளர் காப்பீட்டுச் சட்டம், போன்ற பல சட்டங்களில் சட்டத்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டி இருக்கும். ஆனால் அதன் தேவை அதிகரித்தே வருகிறது.

உதாரணமாக ப்ராவிடண்ட் ஃபண்ட் போன்றவற்றை தான் இறந்துவிட்டால் எவருக்குத் தரவேண்டும் என பணியாளர் குறிப்பிட வேண்டிய பட்டியலில், பணத்தைப் பெற உரிமையுள்ளவராக, அந்தப் பணியாளரின் கணவர்/மனைவி, பெற்றோர், உடன் பிறந்தோர், மற்றும் குழந்தைகள் போன்றவர்களே அனுமதிக்கப்படுகின்றனர்.

குடிமைப்பங்காளர்கள் எனில், அந்த மற்றொரு நபருக்கும் உறவினராக இல்லாவிட்டாலும் கூட, அவர்களுக்கிடையேயான பாலுறவு எப்படிப்பட்டதாக இருப்பினும், சட்டபூர்வ அங்கீகாரம் தரும் நிலையை நாம் வந்தடைந்துவிட்டோம்.

அப்படி ஒரு சட்ட உரிமை கிடைக்கப்பெற்றால் வேறென்னன்ன சமூக மாற்றங்கள் நிகழக்கூடும் எனவும் சிந்தித்து, அதை நேர் செய்யவும் வழிவகை செய்யப்பட வேண்டும். உதாரணமாக முக்கியமாக தத்தெடுப்பு. கணவன், மனைவி அல்லது ஒருவர்கூட தத்தெடுக்கலாம் என்கையில், இவர்கள் தத்தெடுக்கையில் என்னென்ன சட்டச் சிக்கல்கள் வரும் என சிந்தித்து தத்தெடுப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டி இருக்கும்.
இந்தியாவில், எல்லா மதங்களுமே இன விருத்தியை மட்டுமே கணக்கில் கொண்டுதான் திருமணம் எனும் சடங்கை நோக்குகின்றன. சட்டத்தில் தம்பதியரில் எனக்குறிப்பிட நேர்கையில் எல்லாம், கணவன்,மனைவி என்றே குறிப்பிடுவதால், ஒருவர் ஆண், மற்றவர் பெண் என்றே எடுக்க வேண்டி இருக்கிறது. இந்து, கிறித்தவ, சட்டங்களிலும் ஆண், பெண் என்றே சொல்வதாலும் இஸ்லாமிய(பல குழுக்கள் உண்டு)சட்டத்திலும் திருமணத்தை ஆண், பெண்ணுக்கிடையேயான இன விருத்தி பற்றியதாகவே பார்ப்பதாலும், எந்த மதமும் ஓர் பால் திருமணத்தை ஏற்கவில்லை. 

ஆனால் சட்டம், தம்பதியருக்குப் பிறக்கும் எந்தக் குழந்தையும், அல்லது தத்தெடுப்பால் உரிமை உண்டான குழந்தைகளுக்கும் ஒரு திருமண பந்தத்தில் பிறந்த குழந்தைக்கு உள்ள அனைத்து உரிமைகளையுமே அங்கீகரிக்கிறது. இந்நிலையில் இணைந்து வாழும் இருவரின் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பது தேவையே இல்லை.

ஓர்பால் திருமணம் அங்கிகரிக்கப்படுவதை விட, மேற்சொன்ன குடிமைப் பங்காளர்கள் எனும் திட்டம் சரிவரும் என்றே தோன்றுகிறது.

அதிலும் இணைந்து வாழ்வதற்கான ஒப்பந்தம், பிரிவு நேர்ந்தால் பிரிக்கப்பட வேண்டிய உரிமை,கடமைகள் குறித்த ஷரத்துகள் அடங்கிய ஒப்பந்தம், என திட்டமிடலாம்.
இதில் இன்னொரு இலாபமும் இருக்கிறது. இரு நபர்கள் இணைந்துதான் வாழ்கிறார்கள் அங்கே திருமணம் இல்லை என்பதால், மதங்கள் உட்புக முடியாது. ஒரு வியாபார ஒப்பந்தம் போல மட்டுமே இது இருப்பதால், இரு நபர்களுமே அவரவர் மதங்களைத் தொடரலாம்.
மெல்ல மெல்ல மதங்களும் சாதிகளும் ஒழியக்கூட இந்த முறை வாய்ப்பாக அமையலாம்.
ஓர்பால் திருமணம் என்பதற்கு சட்ட அங்கிகாரம் கொடுத்தாலும், சமூக அங்கிகாரம் வரும் வரையில் இது போன்ற திட்டங்கள் உதவலாம். அதற்கும் முன்பாகவே, பலர் வேறு வழியில்லாமலோ வேறு காரணங்களாலோ இணைந்து வாழ்வதைக் காண முடிகிறது. குறிப்பாக திரு நங்கைகள், திருநம்பிகள்.

குடும்பம் என்றால் கணவன்,மனைவி, அவர்களின் குழந்தைகள் என்பதுதான். ஆனால் கூட்டாக வாழ்பவர்களை குடும்பம் எனச் சொல்லாவிட்டாலும், குடிமைப் பங்காளர்கள் என அங்கிகரித்து சட்ட உரிமை கொடுக்க வழிவகை செய்தால் என்ன?

மறுபடி சொல்கிறேன் இது ஓர்பால் திருமண அங்கிகாரம் அல்ல. 

எந்த இருவரும் இணைந்து வாழ முடிவெடுத்தால் அவர்களை ஒரு குடிமைப் பங்காளர்கள் என அங்கிகரித்து, சட்ட உரிமை தருவது பற்றியது.

இது இந்தியாவிற்குமட்டுமானதில்லை. இந்தியா தவிரவும் பல நாடுகளில், இது போன்று இருவர் கூட்டாக வாழ்வதுண்டுதானே?

என்ன செய்யப்போகிறோம்?

உடை சிக்னலா? -ஹன்ஸா



உடை சிக்னலா?
                            -ஹன்ஸா

பாவம் அந்தப் பெரியவர்.

ஜெயசுதாஸ் அவர்களைத்தான் சொல்கிறேன். பெண்கள் ஜீன்ஸ் அணிவது குறித்து எதிர்மறையாக அவர் விமர்சித்தார் என குற்றச்சாட்டும், அதற்கு அவரை எதிர்த்து..ம்ஹும்…அவரை அவமதித்து பல கமெண்டுகள்.

அவரைத் திட்டுவதோடு அவரின் ஆண் வர்க்கத்தையே திட்டி….

இதில் அவர் தலைமுறையும் சரி நாமும் சரி கவனிக்க மறந்த விஷயங்கள் பல.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நம் பாட்டி காலத்தில் ஜீன்ஸ் அணிவதைப் பற்றி..? அப்போது எந்த சராசரிப் பெண்ணும் ஜீன்ஸ் அணிந்திருக்கவே முடியாது நம் ஊரில். மீறி எவரேனும் அணிந்திருந்தால், சமூகத்தில் ஒட்டாதவறாக, சமுக்கத்தை மீறியவராகவே பார்க்கப்பட்டிருப்பார். குடும்பத்தை மீறி அவர் அதைச் செய்தமையால், குடும்ப குணங்கள் இல்லாத “தொழில்’ செய்யும் பெண்ணாகவே பார்க்கப்பட்டிருப்பார்.
அதாவது ஆடை மூலம் ஆணைக் கவரும் தொழில் செய்யும் பெண்ணாக.. அல்லவா?
இதை ஊகிக்க முடிகிறது தானே?

ஆக, அவர்களுக்கு ஜீன்ஸ் எனும் ஆடை ஆணைக் கவரும் ஒரு சிக்னல். அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தார்கள். சூழலும் அதற்கு இடம் கொடுத்தது.

சரி.

இப்போதைய, இளந்தலைமுறைக்கு ஜீன்ஸ் என்பது ஒரு ஆடை. அவ்வளவே. அதிலும் மத்திய, மேல் வகுப்பு(ஃபினான்ஷியலி, மெண்டலி) காரர்களிடம் அது மற்றும் ஒரு உடுப்பு.

அந்தத் தலைமுறையிடம் போய் முந்தைய தலைமுறையின் சரி தவறுகளை வலியுறுத்தினால்..?
ஆக, ஜெயசுதாஸ் ஒரு ஆணாக அந்த உடை பற்றி கமெண்ட் செய்யவில்லை. முந்தை தலைமுறைக்காரராகவே அதை அவர் தன் அனுபவத்திலிருந்து சொல்லி இருப்பதாகவே நாம் அதைப் பார்க்க வேண்டும்..

அதாவது ஜெயசுதாசின் கமெண்ட் ஆண் Vs பெண் அல்ல. முந்தைய தலைமுறை Vs இன்றைய தலைமுறை.

எப்படி அவர் தான் சொன்னதன் முழு வீச்சையும் உணரவில்லையோ அது போலவே அவரின் இந்த கருத்தை எதிர்ப்பவர்களும் எதிர்வினையாற்றுகிறார்கள்.

சரி… அப்படி ஏன் பெண்ணின் உடை பற்றி ஆண்கள் கமெண்ட் செய்வதும் அதற்கு பெண்கள் எதிர்வினையாற்றுவதும் நிகழ்கிறது..?

ஆடை என்பது ’கவர்வது’ எனும் முக்கிய காரணத்திற்காகவும்தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதுமட்டும் அல்ல காரணம்.

இயற்கை தட்ப வெப்பத்திற்கு அஞ்சி மட்டுமே ஆடை அணிந்தார்கள் எனில், இயற்கையே அதற்கு தோலில் முடி (பனிக்கரடி போல) கொடுத்திருக்குமே?
ஆரம்பத்தில் பர்ஸனல் பாகங்களை தூசி, தும்பு, பூச்சி இவற்றிற்காக மூடி இருந்திருக்கலாம்தான்.. ஆனால்,…

இயற்கை ’தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும்’ என்கிறது. அதனாலேயே, திறமையான ஒன்றையே, வலிமையான ஒன்றையே தேர்ந்தெடுக்கிறது இயற்கை.

இயற்கை நியதியின் படி வலிமையான ஆணுக்கே பெண் எதிர்கால சந்ததியை உருவாக்க பிள்ளை பெற விரும்புவாள்.

கவனிக்க..இப்போது உங்கள் மனதில் இருக்க வேண்டியவர்கள் ஆடையற்ற ஆதி மனிதனும், மனுஷியும்தான்.

சரி. எவன் வீரனோ, எவன் தன் குடியைக் காப்பானோ அவனுக்கு பிள்ளை பெறலாம்.

அவன்? எந்தப் பெண் ஆரோக்கியமான குழந்தையை தனக்குப் பெற்றுத்தர இயலுமோ அவளே அவனுக்கும் தேவை.

கொழுத்த பெண்… அவனுடைய குழந்தைக்குத் தோதாக பெருத்த மார்புகள்..இவை … ஆரோக்கியம் அன்று. அதாவது ஒவ்வொரு வேளை உணவுக்கும் உணவு தேடிக்கொண்டே இருக்கும் காலகட்டத்தில் இவை அவனைக் கவர்கின்றன.

””அட..? அப்படியா? எனில் உன்னை இன்னும் கவர்கிறேன் பார். ஏனெனில், என் அடுத்த தலைமுறையை நான்தான் உருவாக்க வேண்டும். போடு மூடியை.”” என அவள் மூடுகிறாள்.

சரி ஆண் என்ன செய்கிறான். அன்றைய ஆணின் எச்சம்தானே இன்றைய ஆண்? பருவவயதில் தான் ஒரு வீரன் எனக் காட்ட ஃபிசிகலாக தீரம் காட்டும் விடலைகளைத்தான் நாம் பேருந்துகளில் பார்க்கிறோமே? இவையும் பெண்ணைக் கவரும் முயற்சிதான்.

இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது.

செக்ஸாலஜிஸ்டுகளும், மனோதத்துவ நிபுணர்களும் ஆண்/பெண் உறவில் மிக முக்கிய உடற்பாகமாகச் சொல்வது விரல்களையும், தொடு உணர்ச்சியையும்தான்.

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மையும் கூட.

எவர் தொடுகையும், உடனே உணர்வுப் பெருக்கை ஏற்படுத்திவிடாது. அதில் நேரம் காலம் போலவே மிக முக்கியமானது தொடும் நபர். ஆக இயல்பாகக்கூட நான் தொடப்படவில்லை. எனும் தகவலை பெண் சொல்ல விரும்புகிறாள். அதனால் மூடுகிறாள் (அந்தத் தகவலை ஏன் அவள் சொல்ல வேண்டும்? ஏனெனில் சிங்கம் போலவே மனிதனில் ஆண் இனமும், எவை தன் குழந்தை என நிச்சயம் செய்து கொள்ள விரும்புவதே)

இப்படி ஆரம்பமான உடை…எவள் அதிகம் மூடி இருக்கிறாளோ அவள் தொடப்படாதவளாக ஆணின் மனதில்.
எது மறைக்கப்படுகிறதோ அது கவரும்தானே?

இதனாலேயே ஆணோ பெண்ணோ, ஆடை அணிகிறோம். மேலும் நாமும் இடம் மாறிக்கொண்டே இருப்பதாலும், மாறிக்கொண்டே இருக்கும் தட்ப வெப்பத்திலிருந்தும் நம்மைக் காப்பதற்காகவும் உடை உடுத்துகிறோம்.. அதையும் விட நம்மை நம் உயரத்தை அடுத்தவருக்குச் சொல்லவும் தோதாக இருக்கிறது இந்த உடை. அல்லவா? எனவே தொடர்கிறோம்.


சரி ஆடை என்பதே சிக்னல்தானா?

இல்லை.
.ஆனால் ஆடை கண்டுபிடிப்பின் ஆரம்பப்புள்ளை சிக்னலாக இருந்ததால் கவர்வதாக இருந்ததால் அது இன்றும் அப்படி மட்டுமே பார்க்கப்படுகிறது.

எவர் மறைப்பதன் மூலம் அடுத்தவரைக் கவர வேண்டுமோ அவர் மட்டும் ஆடை அணியட்டும் என்றில்லாமல், அந்த காலகட்டத்தை எல்லாரும் கடந்தமையால், எல்லாருமே ஆடை அணிவது என்றாகியது
அது தொடர்வதால், கவரும் தேவை இல்லாதவர் அணியும் ஆடைக்கும் ’அதே நோக்கம்’ என்றே பார்க்கப்படுகிறது. ஆடை மூலம் சிக்னல் தரவேண்டிய அவசியத்தில் இன்று நாம் இல்லை.

அது சரி.. அது ஏன் பெண் உடை பற்றி ஆண் கமெண்ட் செய்து கொண்டே இருக்கிறான்..?

’நாப்பது வயசில எதுக்கு இதுங்க பேண்டு போடுதுங்க? பைக் ஓட்டுதுங்க? கிட்ட வந்தாதான் தெரியுது சித்தப்பான்னு”

“இந்த வயசில இவன் எதுக்கு தலைக்கு டை அடிக்கிறான்? தேவையா இது?” என எந்த பெண்ணும் கமெண்ட் செய்து பார்த்ததில்லை.

கவரும் தேவை இருக்கிற ஒரு பெண் ஆணைக் கவர ஏதேனும் செய்தால், அதை எந்தப் பெண் செய்தாலும் எந்த வயதில் செய்தாலும் அது ஆணைக் கவர்ச் செய்வதாகவே அவன் புரிந்து கொள்கிறானது.

எங்கே அவன் தன் செயலை அவனைக் கவரும் சிக்னலாகப் புரிந்து கொண்டுவிடுவானோ எனும் அச்சத்திலேயே பல பெண்கள் தன்னை இன்னும் இன்னும் மூடிக்கொண்டு அதுவே கற்பு, ஒழுக்கம் என தானும் நம்பி, அடுத்தவரையும் நம்பச்செய்துவிடுகின்றனர். இவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் அதே நம்பிக்கையிலேயே..

ஆனால் அதே போல, பெண்ணைக் கவர ஆண் செய்யும் தீர சேட்டைகளை ஒரு முதிர்ந்த ஆண் செய்தால் அது பெண்ணைக் கவர என பெண் எடுப்பதில்லை. காரணம் அவள் உள்ளுணர்வு கற்றுத்தந்திருக்கிறது

ஆனாலும் சில பெண்கள் தவறான ஆணைத் தேர்ந்தெடுப்பதேன்? சோப்ளாங்கியான, உபயோகமற்ற வீணாய்ப் போனவனை தேர்ந்தெடுப்பதேன்.? (விரிவாக பிறிதொரு சமயம்)

ஏனெனில், எல்லா மிருகங்களையும் போல இயற்கை வழி மட்டும் மனிதன் நடப்பதில்லை. பிரபஞ்ச உண்மைக்கு எதிர்த்தே பல சமயங்களில்..

பிரபஞ்ச உண்மை..?
எல்லா மிருகங்களுக்கும் தனக்கு பிறக்கும் அடுத்த தலைமுறையைக் காக்கும் கடமை இருக்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது பேரண்டல் பர்டன்.

அந்த வினாடியில்தான் பிறந்த குட்டியை தாய் ஒட்டகச் சிவிங்க நாவால் வருடிக் கொடுப்பதும், சில நிமிடங்களிலேயே அந்த குட்டியைத் தள்ளிவிடுவதும் நாம் டிஸ்கவரியில் பார்த்திருக்கிறோம்தானே?

“ஓடு….எழுந்து ஓடு..” என கற்றுத்தரும் முயற்சி. மிகக் குறுகிய காலத்திலேயே பேரண்டல் பர்டன் முடிந்து இரண்டும் வெவ்வேறு தனி மிருகங்களாகிவிடுகின்றன.

மனிதனின் பேரண்டல் பர்டன் எனும் குழந்தைய்ப் பராமரிக்கும் காலம் மிக மிக அதிகம். அது பல சமயங்களில் வாழ்னாள் முழுதும் தொடர்கிறது ஆண் குட்டி என்றால்(அதைப் பிறகு பார்ப்போம்)

பெண் மிருகங்களைப் பொறுத்தவரை அடுத்த தலைமுறைய் உருவாக்க வேண்டும் அதற்கு எந்த ஆண் மிருகம் வலிமை மிகுந்தது என அறிந்தால் போதும்.

1. மனித இனத்தில் அப்படி இல்லை. எவன் வலிமையானவன்?
2. எவன் அந்த பேரண்டல் பர்டன் பீரியடில் உடனிருப்பான்?

இந்த இரண்டு தேவைகளையும் கவனத்தில் கொண்டும்,
3. எவை என் குழந்தைகள் எனும் ஆணின் கேள்விக்கும்
பதில் சொல்லும் விதமாக நாம் ஏற்படுத்திக் கொண்டதுதான் ’திருமணம்’..’ஒருவருக்கு ஒருத்தி’..எனும் அமைப்புகள் எல்லாம்.உண்மையில் அவை இயற்கை அல்ல. அல்லவா? ஆனால் இயற்கையின் தேவையும்தான்.

இந்த அமைப்புகள் வந்ததாலேயே பல வீரமற்ற, திறமற்றவருக்கும் தனது அடுத்த தலைமுறையை உருவாக்க வாய்ப்பு.

சரி அது இருக்கட்டும்.

பேரண்டல் பர்டனின் போது பிள்ளையின் தகப்பனாக அவன் இருந்தால் மட்டுமே உடனிருப்பான். எனவேதான் அவள் கற்பு என ஒன்றை தன் மீது போர்த்திக் கொள்கிறாள். அல்லது போர்த்தப்படுகிறாள். அதை ஒட்டிய காமத்தை காதல் என்கிறோம்.
காதல் என்பதே காமத்தின் மீது போர்த்திய பட்டுத்துணிதானே?

ஏன் எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எதாவது லடாய்?

பெண்ணியம் என்பது ஆணை எதிர்ப்பது அல்ல ஆனாலும் ஏன்?

வெயிலி இருந்து நாங்கள் சிலர் உங்கள் வீட்டிற்கு வருகிறோம். உங்களிடம் வெளியே அதிக வெயில் என அலுத்துக் கொள்கிறோம். முதலில் இதை எங்களுக்குள்ளேயே சொல்லிக்கொண்டிருந்திருப்போம். பிறகு எனக்கு இருக்கும் அதே வெயிலும், வலியும்தானே அவருக்கும் என்பதால் பேசிப் பிரயோசனமில்ல என வாளாவிருப்போம்.
அப்போது வீட்டினுள் நுழைந்ததும் நீங்கள். கண்டிப்பாக உங்களிடம் பகிர்வோம்தானே?

ஏனெனில் என் வலியை வலியல்லாத ஒருவரிடம் பகிரும் முயற்சியே அது.
அதே போலத்தான்…பீரியட்ஸ் தொந்தரவையும், பிள்ளை பெறுதல், தனக்கு எந்த உடை கம்ஃபர்டபிலாக இருக்கிறது என பலவற்றையும் ஆணிடம் பெண் பகிர்கிறாள்.
இது வெறும் பகிர்வுமட்டுமே. பதில் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால், அவன் என்ன நினைக்கிறான் ..?

அறைக்குள் இருப்பவரிடம் “நீ மட்டும் அறைக்குள் இருக்கிறாயே? நாங்கள் மட்டும் கஷ்டப்படுகிறோமே அதற்கு நீதான் காரணம் எனச் சொன்னதாக எடுப்பதே போல…

பெண்ணின் வலியைக் கேட்கும் ஆண், பெண் தன்னைக் குறை கூறுவதாகவே நினைக்கிறான். எரிச்சலுறுகிறான். பெண்ணியம் எனும் பதத்தையே கேலி செய்கிறான். பெண்ணியம் என்பது ஹ்யுமனிசத்தின் ஒரு பகுதிதான் அன்றோ?

அந்த எரிச்சலில் அவன் சொல்லும் பதிலை வைத்து இவளும் அல்லது இவர்களில் சிலரும் ஆண் தன் எதிரி என்றே நம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். இது போக ஆணால் பெண்ணுக்கு வரும் இடையுறுகள்…

பெண்ணியம் என்பது பெண்ணாக இருப்பதே என்பதை விடுத்து ஆணைப் போல இருத்தல் என நம்பிவிடுகிறாள்.

ஆணும் பெண்ணும் சமமல்ல, பெண் முற்றிலும் வேறானவள் அவள் மட்டும் கர்பப்பை தாங்கும் வரை.

ஆண்/பெண்/மற்றும் மூன்றாம் இனம்? _ ஹன்ஸா



ஆண்/பெண்/மற்றும் மூன்றாம் இனம்?.

 (பிரச்சினைக்கு பதில் சொல்வது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. பிரச்சினை எது/எங்கே என அறியும் ஒரு முயற்சியே)

_ ஹன்ஸா

ந்த வாசகத்தைச் சொல்லாத பெண்ணே இருக்க முடியாது. “இதென்னதுக்கு மாசாமாசம்..?” அப்படியான அலுப்போடு பேச்சாக மட்டுமே இருந்த ஒன்று இப்போது, அடுத்த கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.

மனநிலை சரியில்லாத, தனக்கு என்ன நிகழ்கிறதென்றே உணர முடியாத பெண் பிள்ளைகளுக்கு, அதன் காரணமாகவும், கர்பப்பையில் ஏதும் நோவுற்றிருந்து அதனால் உயிருக்கே ஆபத்து போன்ற கட்டங்களில் மட்டுமே பெண்ணிற்கு அவளின் கர்ப்பப்பை எடுக்கப்படும்.

ஆனால், சமீப காலங்களாக தன் தொழில் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பும் பெண்கள், திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்கள், அல்லது பிள்ளை பெற்று முடித்து, இனி தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் பெண்கள் என இருப்பவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் மருத்துவர்களிடம், ”கர்ப்பபையை எடுக்க முடியுமா தொழிலுக்கு இடையூறாக இருக்கிறது” என கேட்கின்றனரென்றும் அப்படிக் கேட்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்றும் சில கைனகாலஜிஸ்டுகளிடமிருந்து தகவல் கேட்டறிய முடிந்தது,

சட்டப்படி அது தவறு என இவர்கள் மறுத்துவிடுவதாகவும் மருத்துவர் சொன்னார்.
சட்டப்படி தவறா, நெறிமுறைத் தவறா என்பதை நாம் ஆராய்வதை விட அப்படியான ஒரு தேவை பெண்ணுக்கு ஏன் வந்தது என சிந்திப்பது அந்த கருப்பொருளின் அடிநாதத்தை அறிய உதவலாம். சீர் செய்ய முடியலாம்.

”என்ன தொழிலுக்காக கர்பப்பையை எடுப்பதா?” என அதிர்ந்தோம் எனில் நாம் கொஞ்சம் வெளித் தகவல்களில் பின் நிற்கிறோம் என்றே பொருள்.
இதோ அடுத்த தகவல்….

ஒருவர் படித்து முடித்து தன் தொழிலில் தீவிரமாக இயங்கும் காலம் இருபது முதல் நாற்பது வரை. அந்த காலகட்டங்களிலேயே பெண் குழந்தைப் பேற்றைப் பற்றிய முடிவை எடுக்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில், இரண்டையும் ஒரு சேர இணைப்பது சிரமமாக இருப்பதும், அதே நேரத்தில் இப்படியான சூழல் இல்லாத ஆண்கள் விஞ்சிவிடுவதாகவுமான காரணத்தால், பெண்கள் தன் கரு முட்டையை இளவயதுகளில் உறைய வைத்து சேகரித்து வைத்துவிட்டு, பின் முடிவெடுக்கும் போது பிள்ளை பெற்றுக்க்கொள்ளலாம் என eggsurance.com போன்ற நிறுவனங்கள் ஒரு திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும்..செய்திகளில் வாசிக்க முடிகிறது.

சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் தன் ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டில், பெண்களுக்கு என இருக்கும் பிரசவ விடுமுறை, போன்றவையுடன் கூடுதலாக, பெண்களுக்கு கரு முட்டை உறைய வைக்க ஆகும் மருத்துவ செலவும், ஆண்களுக்கு விந்தணு உறையவைத்துச் சேகரிப்பதும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் தேர்ந்தெடுக்கிறவர்களுக்கும் வாடகைத் தாய் திட்டத்திற்கான செலவிற்கும் பணம் ஒதுக்குவதாகச் செய்தியில் படிக்கிறோம். இதில் அதிக கவனத்தைக் கவராதது விந்தணு சேகரிப்பு. ஏனெனில், இதை பிள்ளைப் பேற்றிற்கு வழி இல்லாத தம்பதியருக்குக் கொடுக்கும் நோக்கிலேயே செய்வதாக புள்ளிவிவரம் சொல்வதாலும் அப்படி சேகரிப்பது என்பது அதன் உரிமையாளரின் தேவை அதில் அதிகம் இல்லை என்பதாலும், இது அதிக கவனத்தைப் பெறவில்லை.

        ருத்துவர் கர்பப்பை எடுப்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, இப்படி ஒரு வாய்ப்பிருந்தால் நாமும்,,? என ஒரு ஆசை எனக்கும் மனதில் வந்து போனதுதான், ஆனால் பின் விளைவுகள், தொடர் உடல்நலக்கோளாறுகள் வருமோ எனும் தயக்கமும் கூடவே.
எனக்கும் அப்படித் தோன்றியதுண்டு என்பதால், என்னை நானே கவனிக்க, மற்றும் தோழிகளோடு உரையாடியும் சிலவற்றை இனம் காண முடிந்தது,
இனி சொல்லப்படுவனவற்றை, இந்திய மனநிலை மற்றும் இந்திய சரி தவறுகளோடு மட்டும் பொருத்திப் பார்க்காமலும், நாம் ஆணோ/பெண்ணோ அந்த கட்டுக்களிலிருந்தும் வெளி வந்து பார்ப்பதும் நல்லது. ஏனெனில் இது உலகளாவியதல்லவா?

      ண்மையில் இதை ஒட்டி சில கேள்விகள் ஆரம்பத்தில் எழும்.
இது தனிப்பட்ட பிரச்சினை, அல்லது தனிப்பட்ட தேர்வு. இது பொதுவில் வைக்கப்பட்டு அரசியலாக்கப்பட வேண்டிய ஒன்றா? அப்படி பொதுவில் வைக்கப்பட வேண்டிய தேவை இந்த பிரச்சினைக்கு இருக்கிறதா? அப்படி வைக்கப்பட வேண்டுமெனில் அதற்கான காரணம் என்ன?

இது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு?

கர்பப்பை பெண்ணின் தனிப்பட்ட உடலுறுப்பு அதில் அவளுக்கு மட்டுமே நூறு சதவீத உரிமை உண்டு. எனில் பின் மற்றவர்கள் அதில் சொல்லவும் பேசவும் என்ன இருக்கிறது.?
இருக்கிறது. கர்பப்பையின் மற்றும் அது சார்ந்த வலி அவளுக்கு அதனால் அதிலிருந்து வெளியேற ஒன்றைச் செய்கிறாள். கர்பப்பையின் பலன் சமூகத்துக்கு அதனால் அதைப் பாதுகாக்கவும் சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

நடவடிக்கை எனில் சட்டம்போட்டு முடக்குவதா? (SAVITA HALAPPANAVAR – அயர்லாந்தில் அபார்ஷன் அனுமதிக்கப்படாமல் உயிர் துறந்த இந்தியப்பெண்..பிரச்சினை நினைவுக்கு வருகிறதா?)
இல்லை. அவளின் தேவை என்ன? என்ன பிரச்சனை கர்பப்பையினால்..? எது அவளை அப்படியான முடிவை நோக்கி நகர்த்தி இருக்கிறது.?

டிவியில் வெள்ளை டைட் பேண்ட்டோடு ஒரு பெண் மலையேறினால் அது நிச்சயம் நேப்கின் விளம்பரமேதான். ஒரு போதும் அது நடக்கவே நடக்காத, … விளம்பர சாமர்த்யம்.
விளையாட்டுப் போட்டிகள், பரிட்சை, தொழில் காரணங்களால் அந்த நாட்களை ஒத்திப் போடுவதே அதிகம் நிகழ்கிறது. அந்த நாட்கள் சுலபமாக அதாவது மற்ற நாட்களைப் போல கடக்க முடியாதவை.

மருத்துவர், வழக்கறிஞர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என பல பெண்களிடம் இதைப் பற்றி பேசியபோது, எங்கே கிளம்புவதென்றாலும் முதலில் அந்த நாட்களா என சிந்திக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளோடு புறப்பட வேண்டும். கழிப்பிட வசதி இல்லாத இடம் எனில் போக முடியாது. நுணுக்கமான ஆனால் சொல்ல முடியாத எரிச்சலுணர்வும், பதட்டமுமாக கழியும் நாட்கள். ஆனால் அதே வேலையில் கூட வேலை பார்க்கும் ஆண் அந்த நேரத்தை உபயோகித்து ஒரு படி மேலேறுவானே எனும் பதட்டமும் உடன் சேரும்.

டுத்த கேள்வி 

அவள் தன்னைப் பற்றி வெளிக்காட்டிக் கொண்டதை சமூகம் காதில் வாங்கவில்லையா? அல்லது இவள் வெளிப்படுத்தவே இல்லையா?அல்லது சொல்லிச் சொல்லி காதில் வாங்காததால் இவளே எடுத்த முடிவா?

கர்பப்பை எடுப்பதைப் பற்றி பேசிய போது அனேகர் சொன்னது ”ஆமா ஆமா அத எடுத்திட்டா எப்டி வேணா மேயலாமில்ல?” 

ஆக, அதை எடுப்பதென்பது வேண்டாத பிள்ளையை வயிற்றில் சுமப்பதைத் தவிர்க்க என்றே புரிந்து கொள்ளப்பட்டது. படுகிறது. (ஆனால் அப்படியான ஒரு காரணமும் இருந்தாலும் அதில் என்ன தவறோ?)  முதலில் அதை எடுப்பதில் உள்ள பிரச்சினைகளில் கவனம் வைப்பது நல்லது.அல்லவா? பதின் வயதுகளில் ஆரம்பித்து, அறுவது வயதுவரை தொடரும் மாதாந்திரத் தொந்தரவுகள் இருக்கட்டும். நான் பிள்ளையே பெறப்போவதில்லை. அல்லது பெற்று முடித்த பின்னும் இது எதற்கு? என பெண் சிந்திப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் கவனத்திற்குறியது, அந்த சிந்தனைப் போக்கு சரிதானா?அல்லது அந்த சிந்தனைக்கு அவளை வரவிடாமல் செய்ய வேண்டுமெனில் சமூகத்திடம் தீர்வேதும் இருக்கிறதா?

உலக உழைப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெண்ணினுடையது. அவள் பெறும் ஊதியம் மூன்றில் ஒரு பங்கு. அவள் பெயரிலான சொத்து 1% இது புள்ளிவிவரம் சொல்லும் செய்தி.
உற்பத்தியாளரின் கோணத்திலிருந்து பார்த்தால், வேலை எவர் செய்கிறாரோ அவருக்கு ஊதியம். எவர் அதிக வேலை செய்கிறாரோ அவருக்கு அதிக ஊதியம்.

பெண்ணை வேலைக்கு வைத்தால் குறைந்தபட்சம் மாத விடுமுறை, பிள்ளைப்பேற்றுக்கான விடுமுறை.. பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு வரை அவள் வெளி வேலை செய்யமுடியாமல் போதல்…

இரவு வரை வெளி வேலை செய்ய முடியாமல் போதல் என்பது அவளது ’முடியாமல் போதல்’ அல்ல.  அதாவது அது அவளது disability அல்ல. குரங்கு மரம் தாவும் அது  நம்மால் முடியாது என்பது போன்றது அல்ல. தாவ மரமே இல்லை அதனால் முடியாது என்பது போன்ற சூழல் சார்ந்த ஒன்று. அல்லவா? அப்படியிருக்க முடியாமல் போகும்படியான சூழலை யார் தந்தார்கள்? பிள்ளைப் பேற்றுக்கான விடுமுறை எனில் அது அவள் பிள்ளை மட்டுமல்ல சமூகத்தின் எதிர்காலம்..இதைப்பற்றி ஒவ்வொரு உற்பத்தியாளரும் கவனித்துக் கொண்டிருக்க இயலாது எனில் அரசுதான் கவனிக்க வேண்டும். அந்த அரசும் அதைச் செய்யாத போது..பெண் இந்த முடிவை நோக்கித் தள்ளப் படுகிறாளோ?

மூன்றாவதான கேள்வி:

தாய்மை என்பது புனிதம் என்றே சொல்கிறோமே அது நிஜமில்லையா? ஏனெனில் அதன் ஆதாரமே வேண்டாம் என பெண்(சிலர்) சொல்லும் அளவிற்கு அதில் விஷயம் ஏதும் இல்லையா?

உண்மையில் தாய்மை என்பது புனிதம் என சொல்லி வைத்தால்தான், அவள் வலி மிகுந்த பிள்ளைப் பேற்றுக்கு சம்மதிப்பாள். தாய்மை புனிதம் என்றால்தான், அதற்கான வேலைகளை அவள் செய்வதும் அதன் பிரதிபலனாக தாயரை மகன் வைத்துக் காப்பதும் உணர்வுபூர்வமாக நிகழும். ஆக தாய்மை எனும் இருபாலாருக்கும் இருக்க வேண்டிய ஒரு உணர்வை பெண்ணுக்குள் ஏற்றி உணர்வுபூர்வமாக அதை இருவரும் புரிந்து கொண்டால் மட்டுமே, அடுத்த தலைமுறைக்கான வித்தாக உதவியாக அது முடியும். அதனால் மட்டுமே அது புனிதம். ..எனவே அந்தப் புனிதம் எனும் tag சில இடங்களில் காக்கப்பட வேண்டியதும் கூட.
அது புனிதம் எல்லாம் இல்லை என பெண்ணோ, அல்லது அப்படியான கல்டிவேடர் டேஸ்டில் இருக்கும் எவருமோ சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இப்போதிருக்கும் அவர்களது சர்வைவல் ஆட்டம் காணுமோ எனும் தயக்கமும் காரணம்.

நிச்சயம் இது பொதுவில் வைக்கப்பட்டு அரசியலாக்கப்பட வேண்டிய ஒன்றே.
ஏனெனில், இருவருக்கிடையேயான ஒரு பிரச்சினை எனில் அதைக் கண்டுகொள்ளாதிருந்தால், பல சமயங்களில் அந்த பிரச்சினைஅவர்களால் தீர்க்கப்பட்டுவிடும்தான். ஆனால் அதே பிரச்சினை பலருக்கும் வரும் பட்சத்தில்,அல்லது வரலாம் என யூகிக்கப்படும்பட்சத்தில் வெளிப்படையாகப் பேசி, அதை அரசியலாக்கினால் மட்டுமே, அது பலரின் கவனத்தையும் பெற்று, அந்தப் பிரச்சினை தனக்கான தீர்வை சமூகத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

பெண்ணும் ஆணும் ஒரு போதும் சமமாக முடியாது. ஏனெனில் இருவரின் சுமைகளும் வெவ்வேறு. ஆனால் களமோ ஒன்றேதான். இதற்கு சுமையை அவனும் கூட சேர்ந்து சுமப்பது தீர்வாகுமா? அல்லது அந்த சுமையை இன்னும் இளவயதில் சுமந்துவிட்டு, பின் ஆணோடு இவள் போட்டி போடலாமா? (ஆணோடு எதற்கு போட்டி? எனும் கேள்வி தொடர்பற்றது என்றாலும், ”தன்னை எது ரெகக்னைஸ் செய்கிறதோ அதை நோக்கியே இருவரும் செல்கிறார்கள்” என்பதே இதற்கான பதில்) 

இவை எதற்கும் சரி பதில் கிடைக்காதெனில் பெண் தனக்குத் தானேயான ஒரு உலகை சிருஷ்டிக்கக்கூடும். அவள் மட்டுமே டாமினேட் செய்யக்கூடிய ஒன்றாக அது ஆகலாம். ஏனெனில், எல்லாவற்றையும் கண்டுபிடித்த அறிவியல் இன்னும் கர்ப்பப்பையைக் கண்டுபிடிக்கவில்லை.

     ரி இது இப்படியே தொடர்ந்தால் வேறென்னென்ன நடக்க வாய்ப்பிருக்கிறது?
அதன் பின்னும் இது தொடர்ந்தால், மனித இனத்தில் மூன்றாவதாக இன்னொரு இனம் சேரலாம். ஆண், பெண் மற்றும் பிள்ளை பெற்றுத்தர வளர்க்க மட்டுமே தயாராக இருக்கும் ஒரு இனம். ஆணோ பெண்ணோ, தன் தேவை திட்டம் அடிப்படையில் இவர்களை நாடி, கடையில் துணி கொடுத்து தைத்து வாங்குவது போல விந்தணுவோ, கரு முட்டையோ கொடுத்து தனக்கான பிள்ளைய்ப் பெற்றுக் கொள்ளும் நிலை வரலாம். 

யுனிசெக்ஸாக இருந்த உயிரிகள் ஆண்/பெண் எனப் பிரிந்தது போல, மூன்றாகலாம். அதன்பின் வேறு வழியின்றி யுனிசெக்ஸாகவும் மாறலாம்.

அது சரியா தவறா என்பதை விட, இயற்கையான முறையில் இந்த பிரச்சினையைச் சரி செய்ய வழி ஏதும் உள்ளதா? என பார்ப்பதே சரி. 

’இது உசத்தி’ என ஒவ்வொரு இனத்திற்கும், குழுவிற்கும் எதோ ஒன்றிருக்கும். இங்கே அது ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறோ? ஒரு வேளை இந்தக் கேள்வியில் பதில் இருக்குமோ?

நாம் என்ன செய்யப்போகிறோம்?